Accu weather

Saturday, November 7, 2009

கணிணியின் ஆழ்துயில்


இப்போது வந்துள்ள புதுவகையான SSD (Solid State Drive) ஹார்டு டிரைவுகள் கணிணியின் வேகத்தை வெகுவாக கூட்டியுள்ளதாம். கணிணியின் பூட்டிங்கிலிருந்து மற்ற எல்லா வேலைகளும் வெகு விரைவாக இருப்பதால் ஒருமுறை SSD உள்ள கணிணியில் வேலை செய்த பின் சாதாரண சுழல்தட்டுள்ள ஹார்டிரைவில் வேலை செய்வது மிக கடினமாக உள்ளதாக சொல்கின்றார்கள். இப்போது நெட்புக்குகளில் சராமாரியாக வரும் இவை விரைவில் கார்பரேட் செர்வர்களையும் நோக்கி பயணிக்கும் போலிருக்கின்றது. இந்த NAND சில்லு SSD -டிரைவுகள் சீக்கிரத்தில் இன்றைய கிளாசிக் ஹார்ட்டிஸ்குகளை பலி கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என் கணிணி வேகமாக பூட்டாகிவர நான் பயன்படுத்தும் பழங்கால டெக்னிக் ஹைபர்னேசன்.(Hibernation). வெண்பனி பொழிந்து எங்கும் குளிர் நிறைந்து கிடக்கும் இக்குளிர்காலத்தில் மனிதர் நாம் Fireplace-யை நாடுகிறோம்.அப்பாவி மிருகங்கள் என்ன செய்யுமாம்.
குளிர்காலம் வந்ததும் அவை தம் குகைகளிலே ஆழ்நிலை தூக்கத்திற்கு போய்விடும் என்கின்றார்கள்.அவை மேல் பரந்திருக்கும் ரோமங்கள் சிறிது உஷ்ணம் கொடுக்கும் அதேவேளையில் உடலில் அவை அது நாளும் சேமித்து வைத்திருந்த கொழுப்பு அவை உயிர்காக்கும். கதிரவன் எட்டிப்பார்க்கும் வசந்தகாலம் வந்ததும் இத்துயிலிருந்து எழும்பி மீண்டும் இரை தேட ஓடத் தொடங்கும். இந்த இயக்கம் தான் ஹைபர்னேசன்.

கணிணியிலும் இந்த ஹைபர்னேசனை Biomimicry செய்துவிட்டார்கள். எப்படி?

நான் விண்டோசை வேகமாக கொண்டுவருவதற்காக கணிணியை Shutdown செய்யாமல் Hibernate செய்வதுண்டு. நாம் hibernate செய்யும் போது அப்போது திறக்கப்பட்டிருக்கும் நம் பயன்பாடுகள், ஓடிக்கொண்டிருக்கும் நம் மென்பொருள்கள் எல்லாம் மூடப்படாமல் அப்படியே உறைந்து நம் கணிணியில் ஒரு கோப்பில் சேமிக்கப்படும். அதனால் மீண்டும் உங்கள் கணிணியை நீங்கள் தொடக்கும் போது மிக வேகமாக திறந்து ஏற்கனவே முன்பு நீங்கள் திறந்துவைத்திருந்த உங்கள் பயன்பாடுகளையும், ஓடிக்கொண்டிருந்த மென்பொருள்களையும் மீண்டும் கொண்டு வந்து தொடரும்.Shutdown செய்யாமல் ஹைபர்னேட் செய்யும் போது அப்போது உங்கள் கணிணியின் நினைவகத்தில் ஓடிக்கொண்டிருந்த எல்லா சமாச்சாரமும் hiberfil.sys எனும் கோப்பில் உறைந்து சேமிக்கப்படுவதால் இது சாத்தியமாகின்றது. உபுண்டுவில் இதை .hibernate.img என்பார்களாம்.

மனிதரின் ஹைபர்னேட்டாகிப் போனது யார் என கேட்டு எனக்கு ரிப் வேன் விங்கிளை (Rip Van Winkle) நினைவுபடுத்தினான் கோபால்.

No comments:

Post a Comment