Accu weather

Saturday, November 7, 2009

எலியின் மரணம்


புஷ்பங்கள் விழ விழ அது புதுசு புதுசாகவும் பூக்குமென ஒரு வசனம் உண்டு. ஒன்று போவதும் இன்னொன்று வருவதும் அது இயற்கையின் நியதி. மனிதர்கள் வரலாம் மனிதர்கள் போகலாம் ஆனால் நான் மட்டும் போய்க் கொண்டே இருக்கின்றேன் என ஒரு நதி பாடியதாக டென்னிசனின் கவி ஒன்றை படித்திருக்கிறேன். நம்ம டிப்பார்ட்மெண்டில் பார்த்தாலேயே தெரியும் ஆடியோ கேசட்டுகளை புதிதாய் வந்த ஆடியோ சிடிக்கள் சாப்பிட்டன. வீடியோ கேசட்டுகளை டிவிடிக்கள் விழுங்கின. பென்டிரைவுகளின் வரவால் ஃப்ளாப்பி டிரைவுகள் மரணித்தன. அடுத்து குண்டு மானிட்டர்கள், டவர் மேஜைக் கணிணிகள் என மறைந்துகொண்டிருப்பனவற்றின் வரிசையில் நம்ம சுட்டெலியும் (Mouse) சேர்ந்திருக்கின்றதாம். பிரபலமாகிக்கொண்டே வரும் தொடுதிரை உள்ளிடு முறைகளும், நம் கை அசைப்புகளுக்கும் வாய்மொழிகளுக்கும் விரல்ரேகைகளுக்கும் கீழ்படியும் திரைகளும் வந்து விட்டப்பின் மவுசின் மவுசு அடங்கிவிடும் போலிருக்கின்றது. ”அண்டகாகசம் அபுகாகாகசம் திறந்திடு சீசேம்” என அந்த காலத்திலேயே அலிபாபா கதையில் வாய்ஸ் ரெக்கக்னிசம் நுட்பத்தை நுழைத்து ரசித்திருக்கின்றார்கள். அற்புத விளக்கை தொடும் போதெல்லாம் அலாவுதீனின் முன் பூதம் தோன்றியதே. ஒருவேளை Fingerprint recognition-ஐ அன்றைக்கே சொல்லிச்சென்றார்களோ?. கதைகளிலும் காப்பியங்களிலும் வந்த கற்பனைகள் இன்றைக்கு நிஜமாகுதல் அங்கேயும் இன்னும் அநேக வரவிருக்கும் இன்னோவேசன்கள் புதைந்துகிடக்கலாமென காட்டுகின்றது.

மடிக்கணிணியை நமது வீட்டு HD டிவியோடு இணைத்து பெரிய 40 இஞ்ச் திரையில் வலை மேய்வது, யூடியூப் வீடியோக்களை பார்ப்பது, 10Megapixel போட்டோக்களை பார்ப்பது ரொம்பவும் ரம்மியமான விசயம். ஆனால் மடிக்கணிணியை இயக்க அதின் மவுசை கிளிக்க என ஒருவர் டிவி பக்கத்திலே ஒண்டிக்கிடக்க வேண்டுமாயிருக்கும். புதிதாக நான் அறியவந்த Air mouse உங்களிடமிருந்தால் நீங்கள் பத்தடி தள்ளி ஹாயாக சோபாவில் அமர்ந்திருந்து இந்த ரிமோட் மவுஸ் வழி மவுஸ் அம்புகுறியை நகர்த்தலாம், கிளிக்கலாம், டபுள் கிளிக்கலாம். எல்லா ஹோம் தியேட்டருக்கும் தேவையான ஒன்று. இன்றைய எக்கனாமிக் சூழலில் என் “Wish list"-ல் மட்டும் சேர்த்து வைத்திருக்கின்றேன்.

No comments:

Post a Comment